பெங்களூரு அருங்காட்சியகச் சிற்பங்கள் - தாருகன் பேருரம் கிழித்த பெண்
பெங்களூரு அருங்காட்சியகத்தில் என்னை மிகவும் கவர்ந்த சிற்பம் இது. சுகாசனக் காளி. பெங்களூரு அருங்காட்சியகம்: சுகாசனக் காளி சிற்ப வர்ணனை மண்டையோட்டு கிரீடம். அதன் வாயிலிருந்து படமெடுக்கும் இரு நாகங்கள். இருபுறமும் அனல் கக்கும் அலைகளாய் விரிசடை. நெற்றிக்கண். மூன்று கண்களும் அகலத் திறந்து வெறித்த நோக்கு. எதிர்மறையாய் வாய் சற்றே திறந்து அழகிய சிறு பற்கள் காட்டும் முறுவல். பேரெழில் பெண் உருவம். நான்கு கைகள். மூன்று உடுக்கை, சூலம், கபாலம் தாங்க, வலது முன்கை காக்கும் கையாக விளங்குகிறது. வலது காதில் நர குண்டலம். இடது காதில் நாக குண்டலம். மண்டையோட்டுப் பூநூல். சரப்பளி முதலிய கழுத்தணிகள். வாகு மாலை, தோள் மாலை, கேயூரங்கள், நான்கு கைவளைகள், ஐந்து விரல்களிலும் மோதிரங்கள், கால்களில் மணி மலைகள். முலைகளின் மேல் சுற்றியிருக்கும் நாக குசபந்தம். (தமிழக சிற்பங்களில் நடுவிரலில் மோதிரம் இருக்காது) இடது கால் மடித்து வலது கால் கீழே தொங்க சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் அன்னை. அவள் வலது காலடியில் வாளும் கேடயமும் பயனற்று கைகளில் கிடக்க விழி பிதுங்கி, வாய் பிளந்து அழுந்திக் கிடக்கும் அசுரன் த...