பாதாமி - வரலாறு
இருப்பிடம்
பாதாமி வட கர்நாடகத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ளது.
பெயர்க் காரணம்
வரலாற்றில் பாதாமியின் பெயர் வாதாபி என்பதாகும். அகத்தியரால் உண்டு செரிக்கப்பட்டு இறந்த அசுரன் வாதாபியோடு இவ்வூரின் பெயரைத் தொடர்பு படுத்தும் கதைகள் உண்டு. அங்கு உள்ள அகத்திய தீர்த்தம் என்னும் ஏரி இக்கதைக்கு வலிமை சேர்க்கிறது.
வரலாறு
சாளுக்கியர் தலைநகரம்
வரலாற்றில் சாளுக்கியர்களின் தலைநகரமாக 6 ஆம் நூற்றாண்டில் பாதாமி அறிமுகமாகிறது. மூன்று பக்கங்களில் குதிரை லாட வடிவத்தில் சூழ்ந்து நிற்கும் மலைகள் இயற்கை அரண்களாய் அமைந்துள்ளது இதன் சிறப்பு. கூடுதலாய் பல்வேறு காலங்களில் மலைகள் மீது கோட்டைச் சுவர்களும் கட்டப்பட்டு கூடுதல் பலம் பெற்றுள்ளது.
சாளுக்கிய அரசின் மையம் கிருஷ்ணையின் துணை நதியான மலபிரபா நதி இரு மலைத்தொடர்களுக்கு இடையே பாயும் சமவெளியில் அமைந்துள்ளது. அதன் முக்கிய இடங்களான பட்டடக்கல், ஐஹொளே நதிக்கரையிலேயே அமைந்திருக்க பாதாமி சற்று தொலைவில் உள்ளது.
சாளுக்கிய அரசின் மையம் கிருஷ்ணையின் துணை நதியான மலபிரபா நதி இரு மலைத்தொடர்களுக்கு இடையே பாயும் சமவெளியில் அமைந்துள்ளது. அதன் முக்கிய இடங்களான பட்டடக்கல், ஐஹொளே நதிக்கரையிலேயே அமைந்திருக்க பாதாமி சற்று தொலைவில் உள்ளது.
சாளுக்கியர் ஆட்சி (பொ ஆ 543 - 757)
சாளுக்கிய வம்சத்தின் தனி ஆட்சி செய்த முதல் மன்னன் முதலாம் புலிகேசி (543 - 66). இவன் தந்தை ரனராகர், பாட்டன் ஜெயசிம்மர் ஆகியோர் பெயர்கள் மட்டுமே அறியப்பட்டுள்ளன. இவனே வாதாபியை கோட்டையாக நிர்மாணித்தான். அதுவரை கர்நாடகத்தை ஆட்சி செய்துவந்த கடம்பர்களை அடக்கி ஆட்சி அமைத்தான். அஸ்வமேத யாகம் செய்தான்.
அடுத்து ஆண்ட முதலாம் புலிகேசியின் மகன்கள் முதலாம் கீர்த்திவர்மன் (566 - 592), மங்களேசன் (592 - 610) ஆகியோர் ஆட்சி எல்லையை விரிவுபடுத்தினர்.
இரண்டாம் புலிகேசி (610 - 42) முதலாம் கீர்த்திவரமனின் மகன். தனக்கு உரிமையான அரியணையை விட்டுத்தர மறுத்த மங்களேசனைக் கொன்று ஆட்சிக்கு வந்தார். இவரே சாளுக்கியர்களில் மிகவும் புகழ் பெற்ற அரசர்.
- ஹர்ஷ வர்த்தனரது தென்னிந்திய படையெடுப்பை நர்மதைக் கரையில் முறியடித்தார். ஹர்ஷர் (மகிழ்ச்சியானவர்) தன ஹர்ஷை (மகிழ்ச்சியை) இழந்தார் என்று அவரது அரசவைப் புலவர் ரவிகீர்த்தி கல்வெட்டில் பதிவிட்டார்.
- பல்லவ அரசன் முதலாம் மகேந்திர வர்மனை (590 - 630) தோற்கடித்தார்.
- கிருஷ்ணா கோதாவரி நதிகளுக்கிடையான பகுதியை கைப்பற்றினார். இப்பகுதி வேங்கி என்றழைக்கப்பட்டது.
- இவர் காலத்தில் சாளுக்கிய பேரரசு வடக்கே நர்மதையிலிருந்து தெற்கே பல்லவ அரசு வரைப் பரவியிருந்தது. இன்றைய மகாராஷ்டிரம், கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகள் அதன் கீழ் இருந்தன.
- சீனப் பயணி சுவான் சாங் (யுவான் சுவாங, Xuanzang, 602 - 664) இவரது ஆட்சி காலத்தில் வாதாபிக்கு வந்து சாளுக்கியர் ஆட்சியின் சிறப்புகளை பதிவு செய்துள்ளார்.
- முதலாம் மகேந்திர வர்மனின் மகன் முதலாம் நரசிம்ம வர்மன் பொ.ஆ. 642 இல் வாதாபியைத் தாக்கினார். அப்போரில் இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டார்.
சாளுக்கிய பேரரசு
(Mlpkr / CC BY-SA (http://creativecommons.org/licenses/by-sa/3.0/)
இரண்டாம் புலிகேசி இறந்தபின் 12 ஆண்டு காலம் வாதாபி பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்தது. பொ.ஆ. 654 இல் இரண்டாம் புலிகேசியின் மகன் முதலாம் விக்கிரமாதித்யர் (654-71) வாதாபியை மீட்டு மீண்டும் சாளுக்கிய அரசை நிறுவினார். அவர் சிவமண்டல தீட்சையை ஏற்று சைவரானார். அதன் பின் சாளுக்கியர்கள் பல சிவன் கோயில்களை நிர்மாணித்தனர்.
அவரது மகன் வினயாதித்தர் (671-96) வெற்றிகரமான வட இந்திய படையெடுப்பை நிகழ்த்தினார். அவர் மகன் விஜயாதித்தர் (696-733) ஆட்சிகாலத்தில் சாளுக்கிய பேரரசு வளமும் அமைதியும் பெற்றுத் திகழ்ந்தது.
விஜயாதித்தரின் மகன் இரண்டாம் விக்கிரமாதித்யர் (733-44) பல்லவர்களை மூன்று முறை தோற்கடித்து அவர்கள் தலைநகர் காஞ்சியைக் கைப்பற்றி மீண்டார். அவ்வெற்றிகளை குறிக்கும் வகையில் அவரது அரசியர் பட்டடக்கல்லில் கோயில்கள் எழுப்பினர்.
அவரது மகன் இரண்டாம் கீர்த்திவர்மர் (744-57) சாளுக்கிய பேரரசின் இறுதி அரசர். தந்திதுர்கர் 757 இல் அவரைப் போரில் கொன்று ராஷ்டிரகூட அரசை நிறுவினார்,
பிற்கால அரசுகள்
அதன்பின் பாதாமி தன் பேரரசின் தலைநகர் என்ற பொலிவை இழந்தாலும் பல்வேறு அரசுகளின் கீழ் முக்கிய கோட்டை நகரமாக இருந்து வந்துள்ளது:
- ராஷ்டிரகூடர்கள் (757-972)
- கல்யாணி சாளுக்கியர்கள் (972-1198)
- காலச்சூரிகள் (1162-84)
- யாதவர்கள் (1192-1313)
- விஜயநகரம் (1336-1570)
- பீஜப்பூர் அதில் ஷாஹிகள் (1490-1686 அவ்வப்போது)
- மொகலாயர்கள் (1686 - நடு 18 ஆம் நூற்றாண்டு)
- மராட்டியர்கள் (நடு 18 ஆம் நூற்றாண்டு -1818)
- ஹைதர் அலி (1774-1778)
- ஆங்கிலேயர் (1818-1947)
ராஷ்டிரகூடர்களும், கல்யாணி சாளுக்கியர்களும் புதிய கோயில்களை எழுப்பினர். விஜயநகர அரசர்கள் கோட்டைகளையும், கோயில்களையும் சீரமைத்தனர்.
நன்றிக்கடன்
Badami; Heritage Series; Dept of Archeology, Museums, Heritage. Bangalore; First Edition; 2012
Badami; Heritage Series; Dept of Archeology, Museums, Heritage. Bangalore; First Edition; 2012

Comments
Post a Comment