பெங்களூரு தொம்மலூரு சொக்கநாதர் கோயில்

பயணம்

பயண நாள்: 02/06/2022 (சுபகிருதுஆண்டு வைகாசி மாதம் 19 ஆம் நாள்). 'சொக்கநாதர்' என்றப் பெயரைக் கொண்டு ஒரு சிவன் கோயிலை எதிர்பார்த்துச் சென்ற என்னை எதிர்கொண்டது ஒரு திருமால் கோயில்.

இடம்: 

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சொக்கநாதசுவாமி கோயில் பெங்களூரில் தொம்மலூரில் (Domlur)உள்ளது.

ஊர்ப் பெயர்

தொம்மலூரில் கல்வெட்டுகளில் 'இலைப்பாக்க நாட்டு தொம்பலூர் ஆன தேசிமாணிக்கபட்டினம்'  என்று குறிப்பிடப்பட்டுளது. அது அமைந்த பகுதி ''இராஜராஜ சோழ வளநாடு' (பொ.ஆ. ?1200) அல்லது  'ராஜேந்திர சோழ வளநாடு ' (பொ.ஆ. ?1266 ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இறைவன் பெயர்

கல்வெட்டுகளில் இறைவன் பெயர் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'திரிபுராந்தகப் பெருமாள்' என்றும் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 'சொக்கப் பெருமாள்' என்றும் காணப்படுகிறது. பிந்தைய பெயர் 'சொக்கநாதர்' ஆகி நிலைத்துவிட்டது. 

காலம்

கோயிலின் விமானமும் அர்த்த மண்டபமும் 10 நூற்றாண்டில் சோழர் ஆகட்டப்பட்டது, மகா மண்டபம் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்டது என கட்டடக்கலை அடிப்படையில் கருதப்படுகிறது. கோயிலின் மிகவும் பழமையான கல்வெட்டு சுமார் பொ ஆ 1200 ஐச் சார்ந்தது. 

கோயில்

சொக்கநாதசுவாமி கோயில் 15-08-1947 இல்
கோயில் வளாகத்தில் இருக்கும் படம்

மேற்கண்டவாறு பாழடைந்து போயிருந்த ஆலயத்தை உள்ளூர் மக்கள் 1975 -1983 இல் இயன்றவரை பழமை மாறாது புனர்நிர்மாணம் செய்துள்ளனர். மதில், ஆஞ்சனேயர், விநாயகர் சந்நிதிகள் பின்னர் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இதை கோயிலில் உள்ள ஒரு தகவல் பலகை தெரிவிக்கிறது. கோயிலின் முன் ஒரு நந்தித் தூண் உள்ளது. அடிப்புற சதுரங்களில் பெரிய திருவடி, சிறிய திருவடி, சக்கரம், சங்கு சிற்பங்கள்.

நந்தித் தூண், கோயிலின் முன்புறம்

கோயில் ஒரு மேட்டின் மீது அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கியது. இருபது படிகள்.  முன்பக்கம் வடக்கே ஆஞ்சனேயர் சந்நிதி, தெற்கே விநாயகர் சந்நிதி. இரண்டும் தற்கால கட்டுமானங்கள்.

ஆஞ்சனேயர் சந்நிதி

புனரமைக்கப்பட்ட மையக் கோயில்

புனரமைக்கப்பட்ட கோயிலில் விமானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், முக மண்டபம் ஆகியன உள்ளன.

இருதள, வேசர விமானம். உபபீடம்உள்ளது. பாதபந்த அதிஷ்டானம். வலபி வரை கல் கட்டுமானம். கபோதத்திலிருந்து மேலே செங்கல், காங்கிரீட் கட்டுமானம். கபோதம் தற்கால sunshade போல உள்ளது. கொடுங்கையாகக் கொள்ளலாம். உடலில் இலைக்கருக்கு அணிகொண்ட பிரம்ம காந்தத் தூண்கள், வெட்டுப் போதிகை. விமானத்தின் தெற்குத் தேவகோட்டம் வெறுமையாக உள்ளது.

விமானம் - தெற்குப் பக்கம்

மேலுள்ள படத்தில் தரையில் தெரியும் ஒரு வெள்ளைச் சதுரத்தைப் போன்று கோயிலைச் சுற்றி ஏழு, உள்ளே மூன்று ஆக பத்து வெள்ளைச் சதுரங்கள் உள்ளன. இவற்றை பிராண புள்ளிகள் என்கின்றனர். பக்தர்கள் ஒவ்வொரு சதுரத்திலும் இறைவனை நோக்கி கை கூப்பி நின்று, மந்திரங்களோடோ இல்லாமலோ, வழிபடுகின்றனர். இப்புள்ளிகளில் பிரபஞ்ச சக்தி குவிகிறது என்கின்றனர்.

அர்த்த மண்டபத்தின் தெற்குப்பகுதி, மகா மண்டபத்தின் பின் பகுதி

மகாமண்டபத்தின் தெற்குக் காட்சி

அர்த்த மண்டபத்தில் ஒரு தேவ கோட்டம், மகா மண்டபத்தில் ஒரு தேவ கோட்டம் உள்ளது. அவையும் வெறுமையாகவே உள்ளன. உள்ளே மகாமண்டபத்தின் தூண்கள் விஜயநகர காலத்தவை.

மகாமண்டபத்தில் விஜயநகர காலத்திய தூண்

கோயில் அர்த்த மண்டபத்தில் ஒரு நிலவறை இருந்ததாகவும் அது மூடப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது.

தற்கால முக மண்டபம்

பித்தி மேற்கு, வடக்கு பகுதிகளில் தூண்கள், கோட்டங்கள் இல்லாத வெற்றுச் சுவராக உள்ளது. வேதிகை மட்டுமே உண்டு. 

மேற்குப் பக்கம்

வடக்குப் பகுதி

நுழைவாயில் தசாவதாரச் சிற்பங்கள்

நுழைவாயிலின் இருபுறங்களிலும் உள்ள தூண்களில் தசாவதாரக் காட்சிகள் உள்ளன.

வாயில் தூண்கள்


மச்சாவதாரம்


வராக, கூர்ம அவதாரங்கள்

நரசிம்ம அவதாரம் - இரண்யனோடு போர், இரண்ய வதம்

லக்ஷ்மி நரசிம்மர்

வாமன அவதாரம்

உலகளந்தப் பெருமாள்

பாலகிருஷ்ணன்

கோயில் இடிபாடுகள் 

கோயில் முற்றத்தில் பழங்கோயிலின் சில பகுதிகள் கிடக்கின்றன.




இறைவன்

மூலவர் சிலைகள் நேபாளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சாளிகிராமக் கல்களால் ஆனவை.

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சொக்கநாதசுவாமி
(படம் நன்றி: 
https://www.viharadarshani.in/2019/09/chokkanathaswamy-temple-history-pranic-energy-timings-domulur-bangalore.html

கல்வெட்டுகள்

Epigraphia Carnatica Vol 9, Bangalore District (1905ed) இல் இந்தக் கோயிலின் கல்வெட்டுகள் பதிவாயுள்ளன. அவை பொ.ஆ.1200 - 1300 க்கு இடைப்பட்டவை.

1. பொ.ஆ. ?1200 - இரண்டு மாதம் விளக்கு எரிக்க பணம் கொடுத்த செய்தி

2.  பொ.ஆ.1266 - தமிழ்க் கல்வெட்டு தலைகட்டு மற்றும் அவரது மனைவி இருவரும் ஜலப்பள்ளி கிராமத்திலிருந்த நிலத்தையும், விண்ணமங்கலம் குளத்தையும், தொம்பலூர் ஏரியின் கீழ் இருந்த சில நிலங்களையும் கொடையாக  வழங்கியது, கோயில் பொறுப்பை வேறு ஒருவருக்கு மாற்றியது பற்றிய செய்தி.

3. பொ.ஆ. ? 1270 - ஒரு கதவின் சட்டத்தில் உள்ள  தமிழ் கல்வெட்டு - அழகியார் என்பவர் கதவின் திருநிலைக்கால் இரண்டு தர்மம் செய்த செய்தி

4. பொ.ஆ. 1290 - தமிழ்நாடு கண்ணனூரில் இருந்து ஆண்ட ஹொய்சாள மன்னர் வீர ராமநாதர் கல்வெட்டு (அவர் அண்ணன் வீர நரசிம்மர் III ஹளேபிடு வில் இருந்து ஆண்டார்.) - திருவிழாச் செலவுக்காக 10 பொன் ஊர் வருமானத்தில் இருந்து கொடுத்த செய்தி.

5. பொ.ஆ. ?1300 - சிதைந்த கல்வெட்டு

6. விஜயநகர மன்னர் இரண்டாம் தேவராயர் (பொ.ஆ. 1422 - 1446) கல்வெட்டு - சொண்டெகொப்பா என்ற ஊரின் வருமானத்தையும், தொம்பலூரில் கிணறுகள், மரங்கள், வீடுகள் ஆகியவற்றை கொடையாக அளித்ததைப் பற்றிய செய்தி.

துணை

தமிழ் விகிபீடியா; தொம்மலூரு சொக்கநாதசுவாமி கோயில்

(படம் நன்றி: Rice, Benjamin Lewis, Public domain, via Wikimedia Commons)










Comments

Popular posts from this blog

சோமேசுவரர் கோயில், ஹலசூரு, பெங்களூரு - பகுதி 4: கிரிஜா கல்யாணம்

பேகூரு பஞ்சலிங்கேசுவரர் கோயில்