பாதாமி-பட்டடக்கல்-ஐஹோளே: மலபிரபா பள்ளத்தாக்கின் கோயில் கலைச் சங்கமம்
மலபிரபா ஆறு பாயும் சிறு பள்ளத்தாக்கின் பாதாமி, பட்டடக்கல், ஐஹொளே முதலிய ஊர்களில் பல்வகைக் கோயில்கள் காணக்கிடைப்பது சிறப்பு.
- குகைக்கோயில்கள்
- கட்டுமானக் கோயில்கள்
குகைக்கோயில்களும், கட்டுமானக் கோயில்களும் சைவம், வைணவம், ஜைனம் ஆகிய மூன்று மதங்களைச் சார்ந்தவை.
இங்குள்ள கட்டுமானக் கோயில்கள் பல்வகை வட இந்திய, தென் இந்திய கோயில் கட்டடக்கலை பாணிகளைச் சார்ந்தவை.
- திராவிட - தென்னிந்திய வகை
- கர்நாடக திராவிட
- நாகர - வட இந்திய வகை
- கடம்ப - பம்சன வகை
- கஜபிருஷ்ட - தூங்கானை மாட வகை
- மண்டப - இப்பகுதிக்கே உரியது
ஒரு கலைப் பாணியின் கூறுகள் மற்ற வகைக் கோயிலில் பயன்படுத்தியுள்ளதும் நிகழ்ந்திருக்கிறது. வெவ்வேறு பாணி கோயில்கள் அருகருகே, அடுத்தடுத்து அமைந்துள்ளதும் சிறப்பாகும்.
இத்தகைய பன்மை இந்தியாவில் வேறெங்கும் இல்லை.
இது 6 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் 12ஆம் நூற்றாண்டின் இறுதிவரையான 650 ஆண்டுகள் மேலைச் சாளுக்கியர்கள் (543-757), ராஷ்டிரகூடர்கள் (757- 972), கல்யாணி சாளுக்கியர்கள் (972-1198) ஆட்சிகளின் கீழ் நிகழ்ந்த கலைப்பணி.
கட்டுமானக் கோயில்கள்
திராவிட பாணி
சாளுக்கியர் காலம்
குகைக்கோயில்களை அடுத்து மேலை சாளுக்கியர்கள் கட்டிய கோயில்கள் திராவிட பாணி கோயில்களாகும். அவற்றுள் சில
முதல் கட்டம்
- பாதாமியில் உள்ள மேல் சிவாலயம், கீழ் சிவாலயம் (6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி*)
- ஐஹொளே மேகுடி குன்றின் உச்சியிலுள்ள ஜைனக் கோயில் (பொ.ஆ. 634)
- மாலகெட்டி சிவாலயம், பாதாமி
![]() |
| மலகெட்டி சிவாலயம், பாதாமி |
இரண்டாம் கட்டம் (7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)
- மகாகூடம் மகா கூடேசுவரர், மல்லிகார்ஜுனர் கோயில்கள்
- பாதாமி ஜம்புகேசுவரர் கோயில் (முதல் திரிகூடக் கோயில்)
மூன்றாம் கட்டம் (8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)
- பட்டடக்கல் சங்கமேசுவரர் கோயில் (விஜயாதித்தர் காலம்)
- பட்டடக்கல் விருபாக்ஷர், மல்லிகார்ஜுனர் கோயில்கள் (இரண்டாம் விக்ரமாதித்தர் காலம்) - இவை சாளுக்கியர் கால திராவிட கோயிற் கலையின் உச்சம். மதில், நுழைவாயில், தனி நந்தி மண்டபம், ஆகியவற்றோடு கோயில் வளாகங்களாக வளர்ந்தன. இரண்டாம் விக்ரமாதித்தர் காஞ்சியில் கண்ட ராஜசிம்மனின் கைலாசநாதர் கோயிலின் தாக்கம்.
![]() |
| மல்லிகார்ஜுனர் கோயில், பட்டடக்கல் |
ராஷ்டிரகூடர்கள், கல்யாணி சாளுக்கியர்கள் காலத்திலும் திராவிட பாணி கோயில்கள் எழுப்பப்பட்டன என்றாலும் அவை மேற்கொண்டு வளர்ச்சி அடையாமல் எளிமையானவையாக அமைந்தன.
ராஷ்டிரகூடர்கள் காலம்
- ஜைனக் கோயில், பட்டடக்கல்
- ஐஹொளே குண்டி தொகுதிக் கோயில்களில் இரு கோயில்கள்
கர்நாடக திராவிட பாணி
கல்யாணி சாளுக்கியர் காலம்
நாகர பாணி
மலபிரபா நதி பள்ளத்தாக்கில் திராவிட பாணி கோயில்களின் தொடர்ச்சியைப் போலன்றி நாகர பாணி கோயில்கள் 7 அம நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரையான சிறு காலத்தில் மட்டுமே எழுப்பப்பட்டன. பல்லவர்கள் பாதாமியை கைக்கொண்டிருந்த காலத்தில் (642 - 654) ஆந்திர பகுதியில் தங்கியிருந்த காலத்தில் சாளுக்கியர்கள் பயன்படுத்தத் தொடங்கிய பாணி இது. தெலுங்கானா மாநிலம் ஆலம்பூரில் உள்ள சாளுக்கியர் கால நாகர பாணி கோயில்களே சான்று.
- பட்டடக்கல் கலகநாதர், காசி விஸ்வநாதர் கோயில்கள் போன்றவை
- ஐஹொளே சக்ரகுடி, ஹுச்சிமல்லி குடி, போன்றவை
- மஹாகூட கோயில்கள் சில
கடம்ப (பம்சன) பாணி
![]() |
| வடக்கு பூதநாதர் கோயில், பாதாமி |
![]() |
| கடம்ப (பம்சன) சிகரம். |
- கடம்ப சிகரம் சதுரமானது. ஒன்றன் மீது ஒன்றாக கிடைமட்டமாய் அடுக்கப்பட்ட படிகளைக் கொண்டது.
- படிகள் மேலே செல்லச் செல்ல சிறுத்து சிகரத்திற்கு பட்டைக்கூம்பு (பிரமிடு) வடிவத்தை அளிக்கின்றன.
- வெளிப்புறம் படிகளுக்கிடையே இடைவெளிகளுடன் அமைந்தது. அந்த இடைவெளிகளை படிகளில் சம இடைவெளியில் தொடர்ந்து அமைந்திருக்கும் சிறு சதுர எறியல்கள் (projections) அணி செய்கின்றன.
- முன்புறம் நீட்டிக்கொண்டிருக்கும் கிளிமூக்கு (சுகநாசி) உள்ளது.
- மேலே கழுத்து (கிரீவம்), நான்கு பட்டை சிகரம், கலசம் ஆகியன உள்ளன.
நன்றிக்கடன்
* Badami, Heritage Series, Dr Shrinivas V Padigar; Dept of Archeology, Museums & Heritage Bangalore; First Edition; 2012
Badami Aihole Pattadakkal; George Michell; Jaico/ Deccan Heritage Foundation






Comments
Post a Comment