மாலகிட்டி சிவாலயம்

 இந்த சிவாலயத்தை பாதாமி பஸ் நிலையத்தின் எதிரில் காவல் நிலையத்தின் பக்கத்தில் செல்லும் தெரு வழியாக அடையலாம். வடக்கு கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு பாறையின் மீது அமைந்துள்ளது. ஏ.எஸ்.ஐ. ஆல் வேலியிடப்பட்டுள்ள வளாகம். பூட்டப்படாமல் மூடி வைக்கப்பட்டிருந்த கேட்டைத் திறந்து உள்ளே சென்றேன். 

மாலகிட்டி சிவாலயம்

குகைக்கோயில் பகுதியிலும், அகஸ்தியர் ஏரிக் கரைப் பகுதியிலும் இருந்த பயணிகள் யாரும் இங்கு வருவதாகத் தெரியவில்லை. ஒரு இளைஞர் மட்டுமே அமைதியான அந்த சூழலில் மண்டபத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்.

மாலகிட்டி சிவாலயம்

7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. மேல் மற்றும் கீழ் சிவாலயங்களுக்கு பிந்தியது. 

கிழக்கு நோக்கிய திராவிட பாணி கோயில்.

  • கருவறையை உள்ளடக்கிய இரு தள விமானம்.
  • அதன் முன் மண்டபம்.
  • முன்னால திறந்த முன் மண்டபம்.

மாலகிட்டி சிவாலயம் - தெற்குப் பக்கப் பார்வை 

விமானம் இரண்டு தளங்கள் கொண்டது.  தரைத் தளத்தின் மேல்நான்கு மூலைகளிலும் கர்ண கூடங்கள். அவற்றுக்கு நடுவில் சாலைக் கூடங்கள். இந்த கூடங்களுடன் கூடிய ஆரம் என்னும் சுற்றுச் சுவர் அமைப்பு மண்டபத்தின் மீதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தின் மீதும் இதே போன்ற கர்ண, சாலைக் கூடங்கள் கொண்ட ஆர அமைப்பு. முதல் தளத்தின் மீது உள்ள கிரீவம் எனும் கழுத்துப் பகுதி மறைந்துள்ளது. அதன் மேல் 8 பட்டை சிகரம். கலசம் இல்லை.

மண்டபத்தின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு இரு அழகிய வேலைப்பாடுடைய சாளரங்கள். அவற்றின் இடையில் தேவகோட்டங்கள். அவற்றில் தென்புறத்தில் சிவன். வடபுறத்தில் விஷ்ணு.

மேலே மகர தோரணுத்துடன் கூடிய அழகிய சாளரம்


நாகம் சூலத்துடன் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்திருக்கும் நின்ற நிலை சிவன் 
மேல் மூலைகளில் இரு கணங்கள்.
கீழே தியானத்தில் ஆழ்ந்திருக்கும் இரு அடியார்கள்.
குப்த மாளவ பாணி.

விஷ்ணு, சக்கரம் சங்குடன்.
மேல் மூலைகளில் இரு கணங்கள்.
அவரது வலதுபுறம் கட கௌமோதகி, விஷ்ணுவின் கதையின் பெண்ணுருவம். தலையின் உச்சியில் கதை போன்ற முடி. இது குப்த மாளவபாணி.
இடதுபுறம் கருடன்.
விஷ்ணுவும் சிவனைப் போலவே கண்மூடி மோனத்தில் உள்ளார். 
படம்: நன்றியுடன்:https://www.talkativeman.com/malegitti-shivalaya-temple-badami/


மண்டபத்தின் முன்புறம் இருபுறமும் வாயிற்காவலர் சிலைகள் உள்ளன. 

வடக்கு வாயிற்காவலர்


தெற்கு வாயிற்காவலர், வாள் கேடயத்துடன் 

உயரமான அடித்தளம் (அதிஷ்டானம்). 

தாங்குதளம்: 1. உபானம் 2. கவிழ் தாமரை ஜகதி.
3. பட்டையுடன் கூடிய உருள் குமுதம், 4. கண்டம் எனும் கழுத்து 5. கபோதம்
6. வியாழ வரி யானை, யாளிகளுடன் அதன் மீது தாமரை வேதிகை.


கபோதத்தை கூடுகள் அழகு செய்கின்றன. கூடுகளுக்குள் மனிதத் தலைகள். கூட்டுக்கு மேல் கொண்டை போன்ற மேல் பகுதி. மேற்கே உள்ள ஒரு கூட்டில் யோக நரசிம்மருடைய சிற்பம் உள்ளது. இது இந்தியாவின் முதல் யோக நரசிம்மர் சிற்பம் என்று கருதப்படுகிறது.

வியாழ வரியில் அழகாக செதுக்கப்பட்ட யானைகளும், யாளிகளும். 

கபோதம் கூடு உடன். மேலே வியாழ வரி

கோயிலைச் சுற்றி கண்டம் என்னும் கழுத்துப் பகுதியை குள்ள பூதங்கள் அலங்கரிக்கின்றன. அவை அன்றைய மனிதர்களின் அன்றாட நிகழ்வுகளைக் காட்டுகின்றன.














மண்டபத்தின் தென் பகுதி

மண்டபத்தின் உட்புறம் எளிமையான சதுரத் தூண்களைக் கொண்டுள்ளது. தரங்கப் போதிகைகள். 

மண்டபமும் கருவறையும்

கூரையில் கருடன் மீது அமர்ந்துள்ள விஷ்ணு சிற்பம்.

சுவர் பகுதியில் ஒரு சூரியன் சாயாதேவி சிற்பம் உள்ளது. 

கருவறை வாயிலை கருட நாக பட்டம் அலங்கரிக்கிறது, வாயிலின் இருபுறமும் நாகங்களும், வாயிலின் மேற்பகுதியில் அவற்றின் வால்களைக் கவ்வியபடி கருடனும் கூடிய இந்த சிற்ப முறை இதற்குப் பின்னான சாளுக்கியர்களின் பெரும்பாலான கோயில்களில் இடம்பெற்றுள்ளது. 

அதன் மேல் பகுதியில் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் செல்லும் சூரியனது சிற்பம் உள்ளது. உள்ளிருக்கும் லிங்கம் பிற்காலத்தையது. 

மேற்குறிய சூரியன் சிற்பங்களால் இது சூரியனுக்கான கோயிலாக இருக்கலாம் என்ற கருத்து உள்ளது.

கோயில் பகுதியில் இருந்து பாதாமி நகரின் ஒரு தோற்றம்.


நன்றிக்கடன் 

* Badami, Heritage Series, Dr Shrinivas V Padigar; Dept of Archeology, Museums & Heritage Bangalore; First Edition; 2012

Badami Aihole Pattadakkal; George Michell; Jaico/ Deccan Heritage Foundation  

Comments

Popular posts from this blog

சோமேசுவரர் கோயில், ஹலசூரு, பெங்களூரு - பகுதி 4: கிரிஜா கல்யாணம்

பெங்களூரு தொம்மலூரு சொக்கநாதர் கோயில்

பேகூரு பஞ்சலிங்கேசுவரர் கோயில்