பாதாமி எல்லம்மா கோயில், விருபாக்ஷர் கோயில்

எல்லம்மா கோயில் என்று தற்காலத்தில்  கோயில் அகத்தியர் தீர்த்தத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இது கல்யாணி சாளுக்கிய அரசன் இரண்டாம் ஜெகதேகமல்லன் (1138-1151) காலத்தில் கட்டப்பட்டது. இதை பரமானந்த தேவர் என்னும் யோகி 1139 இல் கட்டியதாக கூறும் கல்வெட்டு அருங்காட்சியகத்தில் உள்ளது. இது யோகேசுவர விஷ்ணு கோயில் என்று அக்கல்வெட்டு மேலும் தெரிவிக்கிறது.

கோயில் கருவறையை உள்ளடக்கிய விமானம், இடை நாழி (அர்த்த மண்டபம்), முன் மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.

எல்லம்மா கோயில் பாதாமி

மண்டபம் ஒரு உயர்ந்த அடித்தளத்தின் மீது அமைந்துள்ளது. வெளிப்புறம் மூலைக்கு ஒன்றாக 4 தூண்களும், அவற்றுக்கு இடையில் பக்கத்துக்கு இரண்டாக 8 தூண்களும், நடுவில் 4 தூண்களும் ஆக 16 கால் மண்டபமாக விளங்குகிறது. 

வெளித்தூண்கள் மூன்று பகுதிகளாக பிரிக்கபப்ட்ட சதுரத்தூண்கள். அவற்றின் மீது தூண் உறுப்புகள். மேலே நடுப்பட்டையுடன் கூடிய நாற்கர போதிகை. உள் தூண்கள் கடையப்பட்ட உருளைத் தூண்களாக உள்ளன.

மண்டபத்தைச் சுற்றி வெளித்தூண்களுக்கு இடையில் மக்கள் உட்கார திண்ணை அமைப்பு உள்ளது. இது கக்ஷாசனம் (kakshasana) என்று அழைக்கப்படுகிறது.

சதுர வெளித்தூண்கள், உருளை உள் தூண்கள், கக்ஷாசனம் எனும் திண்ணை 

மண்டபத்தின் கூரையின் நடுப்பகுதியில் அழகிய கவிழ் தாமரை சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.. இவவகை கூரைச் சிற்பத்தின் தொடர்ச்சி தமிழக விஜயநகர மன்னர்கள் மண்டபங்களிலும் காணப்படுகிறது.

மண்டபக்கூரையில் கவிழ் தாமரை சிற்பம்

கருவறை பூட்டி இருந்தது.


விமானம் கர்நாடக திராவிட வகை விமானம் ஆகும். திராவிட வகை விமானங்களை போலவே 1. அடித்தளம் (அதிஷ்டானம்), 2. சுவர் (பித்தி), 3.கூரை (பிரஸ்தரம்), 4. கழுத்து (கண்டம்) 5. சிகரம் 6.கலசம் ஆகிய ஆறு உறுப்புகள் கொண்டுள்ளது. சுவரும், கூரையும் மட்டும் ஒவ்வொரு தளத்திலும் உண்டு. மற்ற உறுப்புகள் ஒன்று மட்டுமே.

எல்லம்மா கோயில் விமானம்: 1. அடித்தளம் 2. சுவர்  3. கூரை
4. ஐந்தாம் இறுதித் தளம், அதன் மேல் கழுத்து (கிரீவம்) 
5. சிகரம் 6. கலசம் 7. கிளிமூக்கு

அடிப்படியில் சதுரமான விமானம். ஒவ்வொரு பக்கமும் 5 பகுதிகளாகப் (பத்திகள்) பிரிக்கப்பட்டுள்ளன. மூலைகளில் இருக்கும் பத்திகள் கர்ண பத்திகள் என்று அழைக்கப்படுகின்றன (படத்தில் அ, உ). கர்ண பத்திகளுக்கு அடுத்துள்ள இரு பத்திகள் (பஞ்சர பத்திகள் - படத்தில் ஆ, ஈ) வெளிப்புறம் பிதுங்கியுள்ளன. நடுவில் உள்ள சாலை பத்தி (படத்தில் இ) அவற்றை விட வெளிப்புறம் பிதுங்கியுள்ளன. 


விமானத்தின் ஒரு பக்க தரை வரைபடம்
https://en.wikipedia.org/wiki/File:Square_floorplan_with_five_projections.svg
From: Foekema, Gerard [2003] (2003). Architecture decorated with architecture: Later medieval temples of Karnataka, 1000-1300 AD. New Delhi: Munshiram Manoharlal Publishers Pvt. Ltd.page 43, fig.6b

இந்த 5 பத்தி அமைப்பு மேலே சிகரம் நீண்டு விமானத்திற்கு அழகையும் வலிமையையும் தருகிறது. 

அடித்தளம் மண்டபத்தின் அடித்தளத்தைப் போன்றதே.

தரைத்தள சுவரின் 5 பத்திகளும் அரைத் தூண்களைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பத்தியிலும் அவற்றிற்கு இடைப்பட்ட 4 சுவர்களிலும் தூண்கள் மேல் அமைந்திருக்கும் அழகான விமான அமைப்புகள் (ஸ்தம்ப கூடங்கள்) வடிக்கப்பட்டிருக்கிறன.

எல்லம்மா கோயில் விமானம்: 2,3 ஆம் தளங்கள்.

இந்த கோயில் தரைத் தளம் தவிர மேலே நான்கு தளங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் கூரைப் பகுதி நாகர விமானங்களின் அமலகங்களை நினைவு படுத்தும் தோற்றத்தை கொண்டுள்ளன. கூரையின் மீது ஒவ்வொரு தளத்திலும் நடு மூன்று பத்திகள் மேல் கீர்த்தி முகங்களைக் கொண்டுள்ளன. இறுதித் தளமான 5 ஆம் தள்த்தின் கூரையின் வெளிப்பகுதி மட்டும் மழுங்கி ஒப்பனையற்று உள்ளது. அதன் மேல் கீர்த்தி முகங்களும் இல்லை.

கர்நாடக திராவிட கோயில்களின் ஒரு சிறப்பம்சம் சுக நாசி. சுக = கிளி; நாசி = மூக்கு. இது விமானத்தின் முன்புறத்தில் தரை தளத்திற்கு மேல் கிளி மூக்கு போல நீட்டிக்கொண்டிருக்கும் முகப்பு ஆகும் (படத்தில் எண் 7). இது வட இந்திய நாகர விமான பரம்பரையில் இருந்து பெற்ற அமைப்பு. கோயில் இறைவனின் ஒரு திருவுருவம் இந்த கிளி மூக்கை அலங்கரிக்கும். இங்கு யோக நாராயணர் சிற்பம் இடம் பெற்றுள்ளது. 

சுக நாசி எனப்படும் கிளி மூக்கு, யோக நாராயணர்

சதுர சிகரம். கலசம் காணப்படவில்லை.

எல்லம்மா கோயிலுக்கு எதிரே உள்ள ஒரு தற்கால கோயிலில் 12 நூற்றாண்டு தத்தாத்ரேயர் சிற்பம் ஒன்று உள்ளது. இது எல்லம்மா கோயிலில் முதலில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது 

விருபாக்ஷர் கோயில்

எல்லம்மா கோயிலின் அருகில் வீடுகளுக்கு இடையில் ஜம்புலிங்கர் கோயிலை அடுத்து அமைந்துள்ளது விருபாக்ஷர் சிவன் கோயில். நான் சென்றபோது கோயில் பூட்டி இருந்தது. இது 11 ஆம் நூற்றாண்டு கல்யாணி சாளுக்கியர் கோயில்.

பாதாமி விருபாக்ஷர் கோயிலின் முன்புறம்

கோயில் வாயிலின் மேலே 5 அழகிய சிறு உப்பரிகைகள் போன்ற சிறு சிற்பங்கள் உள்ளன. கூரையின் மேற்புறம் கீர்த்தி முகங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. சுவர்களில் தூண்கள் மேல் அமைந்திருக்கும் அழகான விமான அமைப்புகள் (ஸ்தம்ப கூடங்கள்) அமைந்துள்ளன.

விருபாக்ஷர் கோயில் விமானம்

விருபாக்ஷர் கோயில் விமானம் எல்லம்மா கோயில் விமானத்தைப் போன்றதே - நான்கு தள கர்நாடக திராவிட கோபுரம். எல்லம்ம்ம கோயில் விமானத்தை விட நல்ல நிலையிலும் கலசத்துடனும் உள்ளது. பத்திகளின் பிதுக்கங்கள் குறைவாக உள்ளன.

பாதாமி விருபாக்ஷர் கோயில்


நன்றிக்கடன் 

Badami, Heritage Series, Dr Shrinivas V Padigar; Dept of Archeology, Museums & Heritage Bangalore; First Edition; 2012

Badami Aihole Pattadakkal; George Michell; Jaico/ Deccan Heritage Foundation  

Comments

Popular posts from this blog

சோமேசுவரர் கோயில், ஹலசூரு, பெங்களூரு - பகுதி 4: கிரிஜா கல்யாணம்

பெங்களூரு தொம்மலூரு சொக்கநாதர் கோயில்

பேகூரு பஞ்சலிங்கேசுவரர் கோயில்