பாதாமி ஜம்புகேசுவரர் கோயில் - முதல் முக்கூடக் கோயில்
பாதாமி விருபாக்ஷர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது ஜம்புலிங்கேசுவரர் கோயில். மதிலோ, வேலியோ இல்லாமல் வீடுகளுக்கிடையே பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறது. அருகிலிருக்கும் வீட்டுக்காரர்கள் கோயிலின் முன் மண்டபத்தில் துணி உலர்த்தியிருந்ததைக் கண்டேன். கோயில் திறந்திருந்தது. ஆனால் யாரும் இல்லை.
![]() |
| ஜம்புகேசுவரர் கோயில் முன் மண்டபம் |
கிழக்கு நோக்கிய இக்கோயில் சாளுக்கிய மன்னன் விநயாதித்தனின் அன்னை விநயவதியால் பொ.ஆ, 699 இல் கட்டப்பட்டது.. முன்மண்டபம், மகாமண்டபம், மூன்று கருவறைகள் கொண்டது. மூன்று கருவறைகளைக் கொண்ட கோயில் முக்கூடக் (திரிகூட) கோயில் என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகத்தில் இதுவே முதல் திரிகூடக் கோயில் ஆகும்.
முன்மண்டபம் 16 தூண்களைக் கொண்டது. அதன் மற்றும் உள்ளிருக்கும் மகா மண்டபத்தின் தூண்கள் சதுரமாக உள்ளன. எளிய பட்டைகளும், அவற்றின் மீது அரைவட்டங்களும் வெட்டப் பட்டிருந்தாலும், அவற்றில் சிற்பங்கள், வேலைப்பாடுகள் செதுக்கப் படவில்லை. வெளி வரிசைத் தூண்களுக்கிடையில் அமர திண்ணைகள் உள்ளன.
முன்மண்டபக் கூரை நடுவில் உயர்ந்து சிற்பங்களால்செறிந்துள்ளது. கூரைச் சிற்பங்கள் சாளுக்கியர் கலையின் ஒரு சிறப்பம்சம்.
![]() |
| முன் மண்டபத்தின் நடுப்பகுதி: உயர்ந்த கூரையும் சிற்பங்களும் |
![]() |
| நாகராஜன் |
உள் மண்டபத்துத் தூண்கள் முன்மண்டபத் தூண்களை ஒத்துள்ளன. விரிகோணப்போதிகை அடியில் இரு உருளைகளையும் அவற்றின் மீது நடுவில் பட்டையையும் பெற்று விளங்குகிறது. மண்டபத்தின் நடுப்பகுதியின் கூரை உயர்ந்து சிற்பங்களையும், வேலைப்பாடுகளையும் பெற்றுள்ளது. கூரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. முன் மண்டபம், மகா மண்டபம் இரண்டின் பக்கங்களின் கூரை வெளிப்புறம் சரிந்து அமைக்கப்பட்டுள்ளது. இது சாளுக்கிய முறை.
![]() |
| மகா மண்டபம் |
![]() |
| பார்வதியுடன் நந்தி மீது பயணம் செய்யும் ரிஷபாரூடர் சிற்பம் |
![]() |
| அமர்ந்த நிலை விஷ்ணு சிற்பம் |
![]() |
| தாமரை மீதமர்ந்த நான்முகன் சிற்பம் |
மேற்கு கருவறையில் ஒரு சிவலிங்கம் உள்ளது. மற்ற இரண்டு கருவறைகள் வெறுமையாக உள்ளன.பக்க கருவறைகள் முன் இருக்கும் அர்த்த மண்டபக் கூரைகளில் ஒரு மீன் சக்கரமும் (மத்ஸ்ய சக்ர - மீன்களை ஆரங்களாகக் கொண்ட சக்கரம்), மற்றொன்றில் ஸ்வஸ்திக பந்தமும் உள்ளன.
மூன்று கருவறைகள் மீதும் இருந்த விமானங்கள் அழிந்து விட்டன.முன் மண்டபத்து தூண்களில் இரு கல்வெட்டுக்களை உள்ளன. ஒன்று கோயில் கட்டியத்தைப் பற்றியது. இரண்டாவது, 8 ஆம் நூற்றாண்டில் சக்கிலியர்களுக்கு வரி விலக்கம் அளித்ததைக் குறித்தது.








Really Amazing article & Pictures. Thanks a lot Sir.
ReplyDelete